பிரதமர் மோடி, சீன அதிபருடன் பேசுவேன்-டிரம்ப் உடன் பேசமாட்டேன்: பிரேசில் அதிபர்
- அதிபர் டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை என்றார்.
- பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன் என்றார் பிரேசில் அதிபர்.
பிரேசிலியா:
பிரேசில் மீது அமெரிக்கா கூடுதலாக 40 சதவீதம் வரி விதித்தது. இதனால் பிரேசிலிய இறக்குமதிகள் மீதான மொத்த வரி 50 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா பேசியதாவது:
பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உள்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும்.
அதிபர் டொனால்டு டிரம்பை நான் அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை.
அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன். நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அழைப்பேன். புதினால் இப்போது பயணம் செய்ய முடியாததால் நான் அவரை அழைக்க மாட்டேன். நான் பல அதிபர்களுடன் பேசுவேன் என தெரிவித்தார்.