அமெரிக்கர்கள் ஏன் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு சேவைகளுக்காக முதலீடு செய்யவேண்டும்? - பீட்டர் நவரோ
- இந்தியாவில் AI ஆராய்ச்சிக்கான செலவு அமெரிக்காவை விட மிகவும் குறைவு.
- இந்தியாவின் மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி, முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தரும் களமாக உள்ளது.
OpenAI-ன் ChatGPT போன்ற தளங்கள் அமெரிக்காவிற்குள் இருந்தே இயங்கும் போது, அமெரிக்கப் பயனர்கள் இந்தியாவில் உள்ள AI சேவைகளுக்காக ஏன் 'பணம் செலுத்துகிறார்கள்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கேள்வி எழுப்பியுள்ளார்.
"Real America Voice" நிகழ்ச்சியில் முன்னாள் வெள்ளை மாளிகை தலைமை உத்தி வகுப்பாளர் ஸ்டீவ் பேனனுடன் நடத்திய நேர்காணலில் பேசிய நவரோ, AI தளங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு அங்கிருந்தே இயக்கப்படுகின்றன, ஆனால் அவை இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் பயனர்களுக்குச் சேவை செய்கின்றன என்று வாதிட்டார்.
அதாவது அமெரிக்காவின் வரிப்பணமும் முதலீடுகளும் அமெரிக்காவிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வர்த்தகம் சார்ந்த தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "அமெரிக்கர்கள் ஏன் இந்தியாவில் இருக்கும் AI-க்காகப் பணம் செலுத்த வேண்டும்? ChatGPT அமெரிக்க மண்ணில் இயங்குகிறது, அமெரிக்க மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் இந்தியா, சீனா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள பெரும் பயனர்களுக்குச் சேவை செய்கிறது. எனவே, இதுவும் கவனிக்கப்பட வேண்டிய (தீர்வு காணப்பட வேண்டிய) மற்றொரு பிரச்சனையாகும்," என்று நவரோ கூறினார்.
பீட்டர் நவரோவின் இந்த விமர்சனத்திற்கு இந்திய தரப்பில் வலுவான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவில் AI ஆராய்ச்சிக்கான செலவு அமெரிக்காவை விட மிகவும் குறைவு. மேலும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியப் பொறியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவின் மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி, முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தரும் களமாக உள்ளது. இதனாலேயே பெரும்பாலான ஏஐ நிறுவனங்கள் இந்தியாவை குறிவைக்கின்றன.