உக்ரைன் போர்: ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியாவுக்கு வரி விதித்தோம் - அமெரிக்கா
- ரஷியாவிடம் வர்த்தகம் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார்.
- ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் மிகவும் தெளிவாக கூறி உள்ளார்.
வாஷிங்டன்:
இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.
மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக மேலும் 25 சதவீத வரியையும் விதித்தார்.
ரஷியாவிடம் வர்த்தகம் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். இதற்கிடையே உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின்-டிரம்ப் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷியா மீது மறைமுக அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது கடுமையான வரிகளை விதித்து உள்ளார்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர மிகப் பெரிய பொது அழுத்தத்தை அளித்துள்ளார். இதில் இந்தியா மீதான தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்து உள்ளார். ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் மிகவும் தெளிவாக கூறி உள்ளார்.
ரஷியாவும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவை மீண்டும் மதிக்கின்றன. இது ரஷியா- உக்ரைனுடன் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள 7 மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலை தடுத்து நிறுத்தினோம். இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் வர்த்தகத்தை மிகவும் சக்திவாய்ந்த முறையில் பயன்படுத்தினார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.