இந்தியாவுடன் நான்கு போர்களை நடத்தினோம்... ஆனால் அது மட்டும் பகல் கனவுதான் - பாகிஸ்தான் பிரதமர்
- இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படாமல் போர் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
- கடந்த காலத்தில் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களால் தங்கள் நாடு பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தது என்று தெரிவித்தார்.
கஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணப்படாமல், இந்தியாவுடனான இயல்பான உறவு பகல் கனவாகவே இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக லண்டனில் சென்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் , வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களிடையே நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, "இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நாம் சேர்ந்து வாழ வேண்டும். ஆனால் காஷ்மீர் மக்களின் தியாகங்கள் வீணாகக் கூடாது. அவர்களின் இரத்தம் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் வரை அமைதி சாத்தியமில்லை. இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படாமல் போர் மனப்பான்மையுடன் செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த காலத்தில் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களால் தங்கள் நாடு பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தது என்று குறிப்பிட்ட ஷெபாஸ் ஷெரீப், அந்தப் பணத்தை பாகிஸ்தான் மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக செலவழித்திருந்தால், நாடு அதிகம் வளர்ந்திருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அன்புடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ வேண்டுமா அல்லது சண்டையிலேயே தொடர வேண்டுமா என்பது நம் கைகளில்தான் உள்ளது.
காஷ்மீர் மற்றும் காசா ஆகிய இரண்டு பிரச்சினைகளிலும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.