வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அவரது மனைவி சிறைபிடிப்பு.. நாடு கடத்தப்போவதாக டிரம்ப் அறிவிப்பு
- அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
- இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.
இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.
வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் வெனிசுலாவில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்று டிரம்ப் கூறி இருந்தார்.
இந்நிலையில் வெனிசுலா தலைநகர் கராகசின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தன.
குண்டுகள் வெடித்ததில் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டு கரும்புகை எழும்பியது. மேலும் தலைநகரின் பல இடங்களில் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றன.
வெடிப்பு சத்தங்களை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். தலைநகர் கராகசில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுராவும் அவரது மனைவி சிலியா புளோரஸ்-உம் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் தனக்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இன்று காலை 11 மணிக்கு, மார்-ஏ-லாகோவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவில் எண்ணெய் வளங்கள் அதிகம் உள்ளது. அங்கு எண்ணெய் தேசியமயமாக்கப்பட்டுள்ளது. அதை எடுக்கும் தொழிலை தனியார் மயமாக்காமல் அந்நாட்டு இடதுசாரி அரசே எடுத்து நடத்தி வருகிறது.
இதனால் போதைப்பொருளை காரணம் காட்டி வெனிசுலா எண்ணெய் வளங்களை தனியாருக்கு திறக்க அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் ஒரு சாரார் கருதுகின்றனர்.
வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியாவுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதும் அதை அவர் டிரம்ப்க்கு சமர்ப்பிப்பதாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.