உலகம்

EV கார்களில் ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள்- சீனா எடுத்த அதிரடி முடிவு

Published On 2026-01-02 16:52 IST   |   Update On 2026-01-02 16:52:00 IST
  • விபத்துகளில் மீட்புப் பணியாளர்கள் கதவைத் திறக்க முடியாமல் திணறல்.
  • விபத்தின் போது மெக்கானிக்கல் ஹேண்டில்கள் 98% சரியாக வேலை செய்வதாக ஆய்வில் தகவல்.

கார்களில் உள்ள தானியங்கி அல்லது மறைக்கப்பட்ட பவர் டோர் ஹேண்டில்களை தடை செய்ய சீன அரசு புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

சமீபகாலமாக எலக்ட்ரிக் கார்களில் (EV) அழகிற்காகவும், காற்றின் வேகத்தைத் தாங்கிச் செல்வதற்காகவும் (Aerodynamics) கதவின் உட்புறமாக மறைந்திருக்கும் ஹேண்டில்கள் பிரபலமாகின. ஆனால், இதில் பல பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

விபத்து ஏற்பட்டு காரின் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, கதவுகள் திறக்காமல் பயணிகள் உள்ளேயே சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. பல விபத்துகளில் மீட்புப் பணியாளர்கள் கதவைத் திறக்க முடியாமல் திணறிய நிகழ்வுகள் சீனாவில் பதிவாகியுள்ளன.

இதேபோல், கடும் குளிரில் இந்த ஹேண்டில்கள் உறைந்து போவதும், மழையினால் மின் கசிவு ஏற்பட்டு வேலை செய்யாமல் போவதும் வாடிக்கையாளர்களிடையே புகார்களை அதிகரித்தது.

இந்த வகை ஹேண்டில்களில் குழந்தைகளின் விரல்கள் சிக்கி காயமடையும் சம்பவங்கள் சீனாவில் அதிகளவில் பதிவாகியுள்ளன.

ஆய்வுகளின்படி, விபத்தின் போது மெக்கானிக்கல் ஹேண்டில்கள் 98% சரியாக வேலை செய்கின்றன. ஆனால், இந்த எலக்ட்ரானிக் ஹேண்டில்கள் வெறும் 67% மட்டுமே பலன் தருகின்றன என்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையின்படி, ஜனவரி 1, 2027 முதல் சீனாவில் விற்பனை செய்யப்படும் 3.5 டன்களுக்கு குறைவான எடைகொண்ட அனைத்து கார்களிலும் மெக்கானிக்கல் எமர்ஜென்சி ஓப்பனிங் வசதி இருக்க வேண்டும்.

காரின் மின்சாரம் முழுமையாக நின்றாலும், எந்தக் கருவியும் இன்றி கைகளால் கதவைத் திறக்கும் வசதி கட்டாயம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கதவிலும் வெளிப்புற ஹேண்டில்கள் கைகளால் பிடித்து இழுக்கும் வகையில் போதிய இடைவெளியுடன் இருக்க வேண்டும்.

இந்த தடை உத்தரவு 2027ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News