ஆக்கிரமிப்பு கிராமம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 27 பொதுமக்கள் உயிரிழப்பு: ரஷியா குற்றச்சாட்டு
- புத்தாண்டு இரவு உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
- ரஷியாவின் ராணுவ இலக்குகளை மட்டும் இலக்கு வைத்ததாக உக்ரைன் விளக்கம்.
ரஷியா- உக்ரைன் இடையிலான சண்டை 4 வருடங்களாக நடைபெற்று வருகிறது. சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திதான் வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனின் ஆக்கிரமிப்பு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கஃபே மற்றும் ஓட்டல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 27 பேர் உயிரிழந்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
கெர்சன் பிராந்தியத்தில் உள்ள கோர்லி கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐந்து மைனர்கள் உள்பட 31 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷியாவின் இந்த குற்றச்சாட்டு உக்ரைன் மறுத்துள்ளது. உக்ரைன் பொதுப்படைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரோ லிகோவி இது தொடர்பாக கூறுகையில் "உக்ரைன் படைகள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. ரஷியாவின் ராணுவ இலக்குகள், எரிபொருள் மற்றும் எரிசக்தித் துறை தொழிற்சாலைகள் மற்றும் பிற சட்டப்பூர்வ இலக்குகளுக்கு எதிராக மட்டுமே தாக்குதல்களை நடத்துகின்றன.
நடந்துகொண்டிருக்கும் அமைதி பேச்சுவார்த்தைகளை சீர்குலைப்பதற்காக, தவறான தகவல்களையும் பொய்களையும் ரஷியா மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறது.
புத்தாண்டு தினத்தன்று இரவு உக்ரைன் ராணுவம் தாக்கிய இலக்குகளின் தெளிவான பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் கெர்சன் பிராந்தியத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் மீதான தாக்குதல்கள் இடம்பெறவில்லை" என்றார்.