உலகம்

அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை- அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published On 2025-08-30 10:41 IST   |   Update On 2025-08-30 10:41:00 IST
  • தனது அதிகாரத்தை மீறி ட்ரம்ப் வரிகளை விதித்து உள்ளதாக கருத்து.
  • வரி விதிப்பு குறித்து நீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த பேரழிவு என ட்ரம்ப் விமர்சனம்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.

அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.

அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதற்கிடையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

Tags:    

Similar News