ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்.. உலக நாடுகள் சொல்வது என்ன?
- நிலைமை மேலும் மோசமடைந்தால் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
- ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஈரான் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது ஒரு ஆபத்தான திருப்புமுனை என்றும், மத்திய கிழக்கில் இராணுவத் தலையீடுகள் நீண்டகால மோதல்களுக்கும் பிராந்திய ஸ்திரமின்மைக்கும் வழிவகுக்கும் என்றும் சீனா அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்கும் இராஜதந்திர அணுகுமுறையே ஸ்திரத்தன்மைக்கு சிறந்த வழி என்று கூறியுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அமெரிக்காவின் தாக்குதல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்தார். நிலைமை மேலும் மோசமடைந்தால் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு இல்லை. ஒரே வழி இராஜதந்திரமே என்று கூறி, பதற்றத்தைத் தணிக்க அனைத்து உறுப்பு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் அதிபர் டிரம்பின் நடவடிக்கையை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கை என்று கூறியதுடன், மத்திய கிழக்கில் ஒரு பேரழிவு தரும் போரில் அமெரிக்கா சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதாக எச்சரித்தனர். எந்தவொரு எதிர்மறையான விளைவுகளுக்கும் டிரம்ப் தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்று தெரிவித்தனர்.
சவுதி அரேபியா, அமெரிக்கா ஈரானிய அணுசக்தி வசதிகளைத் தாக்குவதைக் பெரும் கவலையுடன் கவனிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும், அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும், அமெரிக்கா அந்த அச்சுறுத்தலைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். பதற்றத்தைத் தணித்து இராஜதந்திர தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலியா,ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், பதற்றத்தைத் தணித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.