அமெரிக்காவில் 43 நாட்கள் நீடித்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது.. மசோதாவில் கையெழுத்திட்டார் டிரம்ப்
- இந்த பொது முடக்கம் காரணமாக 700,000 பேர் ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.
- அமெரிக்காவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் மிகப்பெரிய பொது முடக்கத்தை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொள்கிறது.
அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய அரசு முடக்கம், எந்த மாற்றமும் இல்லாமல் 43வது நாளாக இன்று வரை தொடர்ந்தது.
இந்த பொது முடக்கம் காரணமாக 700,000 பேர் ஊதியமின்றி வேலை செய்கின்றனர். 670,000 பேர் வேலை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் அத்தியாவசிய சேவைகளை கூட அணுக முடியவில்லை.
அமெரிக்காவில் உள்ள 40 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகளும் இந்த நிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, அமெரிக்காவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், அமெரிக்காவில் வேலையின்மையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 4.6 சதவீதமாக இருந்த சராசரி வேலையின்மை விகிதம் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
டிரம்பின் பிடிவாதமே இந்த பணிநிறுத்தம் தொடரக் காரணம் என்று ஜனநாயகக் கட்சியினர் கூறினர்.
இந்நிலையில் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிதி மசோதாவை பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது .
மசோதாவுக்கு ஆதரவாக 222 உறுப்பினர்களும், எதிராக 209 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஆறு ஜனநாயகக் கட்சியினரும் மசோதாவை ஆதரித்தனர்.
இந்த மசோதா செனட்டில் நிறைவேற்றப்பட்டு, பிரதிநிதிகள் சபைக்கு சென்றடைந்துள்ளது. இதன் மூலம் தற்காலிகமாக வரும் ஜனவரி 30 ஆம் தேதி வரை அமெரிக்காவில் அரசு சேவைகளுக்கான நிதி விடுவிக்கப்படும்.
இந்த நிதி மசோதாவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனைத்தொடர்ந்து அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்க உள்ளது.
இருப்பினும், விமான சேவைகள் உட்பட அமெரிக்கா இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சிறிது நேரம் ஆகும்.
முன்னதாக பணிநிறுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அமைப்பான காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் மதிப்பிடப்பட்டது.
1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த சமயம் 2018-19 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.