போன் உரையாடல் கசிவு: தாய்லாந்து பெண் பிரதமர் பதவி நீக்கம்
- கம்போடியா தலைவருடன் பேசிய போன் உரையாடல் கசிந்து பிரச்சினை ஏற்பட்டது.
- ராஜினாமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார்.
இது தொடர்பான உரையாடல்கள் கசிந்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிராக அதிருப்தி எழுந்தது. மே 28ஆம் தேதி கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையை கையாண்ட விதம், தொலைபேசி உரையாடல் எதிரொலியாக எதிர்ப்பலை கிளப்பியது.
இதன் காரணமாக பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் பாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்தது. இதனைத்தொடர்ந்து தாய்லாந்து மன்னர் புதிய அமைச்சரவை அமைக்க ஒப்புதல் வழங்கினார்.
இந்த நிலையில் ஷினவத்ரா பிரதமர் பதவியில் நீக்கிய அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ராணுவம் அல்லது நீதித்துறையால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார்.
ஷினவத்ரா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், தாய்லாந்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மே 28ம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் கம்போடியா ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர். இது ஜூலை 24ஆம் தேதி தாய்லாந்து- கம்போடியா ராணுவ வீரர்கள் எல்லையில பயங்கரமாக மோதலுக்கு வழி வகுத்தது. இந்த சண்டை ஐந்து நாட்கள் நீடித்தன. எல்லைப் பகுதியில் இருந்து ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டன. பின்னர் இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டனர்.
தனது மீதான குற்றச்சாட்டு குறித்து ஷினவத்ரா "பிரச்சினைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், ஆயுத மோதலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், வீரர்கள் எந்த இழப்பையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே நான் யோசித்தேன்.
நான் மற்ற தலைவரிடம் சொல்லுவது, எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாதது" எனத் தெரிவித்திருந்தார்.