உலகம்

தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு- 9 பேர் உயிரிழப்பு

Published On 2025-12-21 13:52 IST   |   Update On 2025-12-21 13:52:00 IST
  • சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.
  • தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் மேற்கே உள்ள பெக்கர் ஸ்டால் பகுதியில் ஒரு மதுபான விடுதியில் இன்று அதிகாலை ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் வந்தனர். 2 வாகனங்களில் வந்த அக்கும்பல் மதுபான விடுதி முன்பு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

பின்னர் அக்கும்பல் தப்பி சென்றபோது சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.

இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையே 12 மர்ம நபர்கள் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மதுபான விடுதி சட்ட விரோதமாக நடந்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 6-ந்தேதி தலை நகர் பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஒரு தங்குமிடத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து 12 பேரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News