உலகம்

கனடாவில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 பேர் சுட்டுக்கொலை- போலீசார் அதிரடி

Published On 2022-06-29 04:58 GMT   |   Update On 2022-06-29 06:58 GMT
  • வங்கியில் புகுந்த 2 பேர் அதிக ஆயுதங்களை வைத்திருந்தனர். அவர்கள் கவச உடை அணிந்திருந்தனர்.
  • இரண்டு நபர்கள் பற்றிய எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.

ஒட்டாவா:

கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமெரிக்க எல்லை அருகே உள்ள வான்கூவர் தீவில் இருக்கும் சானிச்சில் ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கிக்குள் இரண்டு பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். இதைப்பார்த்த வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் வங்கிக்கு விரைந்து வந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர். வங்கிக்குள் இருக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.

அப்போது 2 மர்ம நபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மர்ம நபர்கள் சுட்டதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே மர்ம நபர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கி அருகே வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, வங்கியில் புகுந்த 2 பேர் அதிக ஆயுதங்களை வைத்திருந்தனர். அவர்கள் கவச உடை அணிந்திருந்தனர்.

6 போலீஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்றார்.

ஆனால் அந்த இரண்டு நபர்கள் பற்றிய எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை. வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கில் புகுந்தார்களா? அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News