உலகம்

டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவி- எலான் மஸ்க் ராஜினாமா செய்ய முடிவு?

Published On 2022-12-21 06:30 GMT   |   Update On 2022-12-21 06:30 GMT
  • டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் தான் தொடர வேண்டுமா என்று டுவிட்டரில் எலான் மஸ்க் கருத்து கணிப்பு நடத்தினார்.
  • 1.7 கோடி பேர் பங்கேற்ற கருத்து கணிப்பில் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என்று 57.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

வாஷிங்டன்:

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்ற அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். 50 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.

மேலும் டுவிட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். இதற்கிடையே டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் தான் தொடர வேண்டுமா என்று டுவிட்டரில் எலான் மஸ்க் கருத்து கணிப்பு நடத்தினார். 1.7 கோடி பேர் பங்கேற்ற இந்த கருத்து கணிப்பில் அவர் பதவி விலக வேண்டும் என்று 57.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். 42.5 சதவீதம் பேர் எலான் மஸ்க், பதவியில் தொடர விருப்பம் தெரிவித்தனர்.

பெரும்பாலானோர், பதவி விலக வேண்டும் என்று தெரிவித்ததால் அதை ஏற்று எலான் மஸ்க், பொறுப்பில் இருந்து விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை விரைவில் ராஜினாமா செய்வேன். அந்த பதவிக்கு ஒரு முட்டாள்தனமான நபரை தேடிப்பிடித்து விட்டு ராஜினாமா செய்வேன். அதன் பிறகு மென்பொருள், சர்வர் பணிகளை மட்டும் ஏற்று நடத்துவேன் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து எலான் மஸ்க்கை பின் தொடர்பவர்கள் கூறும்போது, 'தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு ஏற்கனவே ஒருவரை தேர்வு செய்துவிட்டு எலான் மஸ்க் இந்த கருத்து கணிப்பை நடத்தியது போல தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News