பிரிட்டனுக்கு ஜாக்பாட்.. இறக்குமதி வரியை பாதியாகக் குறைத்த சீனா - டிரம்ப் பொருமல்
- இங்கிலாந்துக்கு 250 மில்லியன் பவுண்ட் மிச்சமாகும்.
- சீனாவுடனான வர்த்தகம் இங்கிலாந்துக்கு ஆபத்தானது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 4 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்று தற்போது நாடு திரும்பியுள்ளார்
தனது பயணத்தின்போது, தலைநகர் பிஜீங் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனாவுக்கு செல்வது இது முதல் முறை ஆகும்.
நேற்று முன் தினம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது. இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் பிரிட்டனின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான விஸ்கி மீதான இறக்குமதி வரியைச் சீனா பாதியாகக் குறைத்துள்ளது.
அதாவது 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு 250 மில்லியன் பவுண்ட் மிச்சமாகும். இதில் இங்கிலாந்து பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தும்.
மேலும் இந்தப் பயணத்தின் மூலம் பல பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் பிரதமர் ஸ்டார்மர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு மிரட்டல்களுக்கு மத்தியில், பிரிட்டன், கனடா ஆகிய நாட்டு தலைவர்கள் சீன பயணம் மேற்கொண்டு அந்நாட்டுடன் உறவை வளர்த்து வருகின்றனர்.
இதற்கிடையே சீனாவுடனான வர்த்தகம் இங்கிலாந்துக்கு ஆபத்தானது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.