அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு- பெண் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு
- சிகிச்சை பலனின்றி பெண் பாதுகாப்பு படைவீரர் சாரா பெக்ஸ்ட்ரோம் பரிதாபமாக உயிரிழந்தார்.
- மற்றொரு இளைஞன் ஆண்ட்ரூ வுல்ப் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நேற்று மர்ம நபர் ஒருவர் அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனே சுதாரித்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அந்த மர்ம நபரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். படுகாயமடைந்த வீரர்களை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி பெண் பாதுகாப்பு படைவீரர் சாரா பெக்ஸ்ட்ரோம் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்," மிகவும் மதிக்கப்படும் ஒரு அற்புதமான இளம் வீரரை நாடு இழந்துள்ளது. அவர் இப்போது நம்முடன் இல்லை. அவரை காப்பாற்ற முடியாத எங்களை இப்போது அவர் இழிவாக எண்ணிக்கொண்டிருப்பார். அவரது பெற்றோர்களுக்கு நாங்கள் ஆறுதலாக இருக்கிறோம். நடந்ததை சரி செய்யமுடியாது.
இது தற்செயலாக நடந்த ஒன்று. தாக்குதலில் பாதிக்கப்பட்ட 24 வயதே ஆன மற்றொரு இளைஞன் ஆண்ட்ரூ வுல்ப் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவர் உயர்பிழைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.
துப்பாக்கி சூடு நடத்திய ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 29 வயதான ரகமானுல்லா லகன்வால் பற்றி சி.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா ராணுவம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த காலக் கட்டத்தில் சி.ஐ.ஏ.வின் ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தான் ரகசிய போராட்டக்குழுவான ஜீரோ யூனிட்டில் ரகமானுல்லா லகன்வால் பணியாற்றினார்.
கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து தனது ராணுவத்தை திரும்பப் பெற்றதையடுத்து, அப்போதைய அதிபர் ஜோபைடனின் அலைஸ் வெல்கம் திட்டத்தின் கீழ் ரகமானுல்லா அமெரிக்கா வில் குடியேறினார்.
இந்த குடியேற்றத்தை ஜோபைடன் அரசு பல வழிகளில் நியாயப்படுத்தியது.
பாதுகாப்பு படை வீரர்களை மிக அருகிலிருந்து சுட்டதால் நாம் இப்போது இளம் வீரரை இழந்துள்ளோம் என சி.ஐ.ஏ. இயக்குனர் ராட்கிளிப் தெரிவித்துள்ளார்.