இடி மேல் இடி.. ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
- ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
- ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மூன்று ஊழல் வழக்குகளில் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் புர்பச்சோல் பகுதியில் உள்ள ராஜுக் நியூ டவுன் திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஹசீனா தற்போது இந்தியாவில் தலைமறைவாக உள்ளதாலும், விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை என்பதாலும் நீதிமன்றம் தாமாக விசாரணையை நடத்தி தீர்ப்பை அறிவித்தது.
மூன்று வழக்குகளில் ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அதனைத் தொடர்நது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.
மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் இந்தியாவை வலியுறுத்தி வரும் நிலையில் இந்த புதிய தீர்ப்பு வந்துள்ளது.