உலகம்

விடிய விடிய பேச்சுவார்த்தை.. விடிந்ததும் தாக்குதல் - உக்ரைன் மீது பாய்ந்த ரஷிய டிரோன்கள் - 5 பேர் பலி

Published On 2025-08-18 23:11 IST   |   Update On 2025-08-18 23:11:00 IST
  • டிரோன் தாக்குதலில் ஒரு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
  • கார்கிவ் மீது ரஷிய ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது.

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக நேற்று முன்தினம் ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் ரஷியா இன்று நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

கார்கிவ் நகரில் உள்ள ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடத்தை ரஷிய டிரோன் தாக்கியது. இந்த சம்பவத்தில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர்.

தகவல் கிடைத்தவுடன், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கார்கிவ் மீது ரஷிய ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தில் 13 வயது சிறுவன் உட்பட எட்டு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Tags:    

Similar News