லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலுக்கு உக்ரைனுக்கான அமெரிக்க தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாத சக்திகளை ரஷியா பயன்படுத்துகிறது என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
ரஷியாவின் Tu-95 என்ற குண்டுவீச்சு விமானங்கள் இன்று அதிகாலை காஸ்பியன் கடலில் இருந்து கீவ் மீது ஏவுகணைகளை ஏவியதாகவும், உக்ரைன் தலைநகரின் கிழக்கு மாவட்டங்களில் குண்டுகள் விழுந்து வெடித்ததாகவும் உக்ரைன் விமானப்படையினர் மற்றும் நகர மேயர் ஆகியோர் தெரிவித்தனர்.
கீவ் புறநகர்ப் பகுதியில் பீரங்கிகள் மற்றும் சில கவச வாகனங்களை தாக்குதல் நடத்தி அழித்துவிட்டதாக ரஷியா கூறி உள்ளது. இவை ஐரோப்பிய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதை ரஷியா தடுக்காது என அந்நாட்டு அதிபா் புதின் தொிவித்துள்ளாா். உக்ரைன் துறைமுகங்கள் வழியாகவும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பகுதிகள் வழியாகவும், மத்திய ஐரோப்பா வழியாகவும் ஏற்றுமதி செய்யலாம் என்றும் அவர் கூறினார். உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள், குறிப்பாக, ஒடெசாவை பயன்படுத்தலாம். ஆனால் உக்ரைன் வசம் உள்ள துறைமுகங்களைச் சுற்றியுள்ள உக்ரைன் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் புதின் வலியுறுத்தினார்.
உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட, 20 மில்லியன் டன் தானியங்களை ரஷியா தடுத்துள்ளதாக உக்ரைனும் மேற்கு நாடுகளும் கூறிய நிலையில், புதின் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கத் தொடங்கினால், ரஷியா புதிய இலக்குகளை கடுமையாக தாக்கும் என்று அந்நாட்டின் அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் எந்த இலக்கு என்பதை புதின் தெரிவிக்கவில்லை.
ரஷிய துருப்புக்கள் மற்றும் ஆயுத குவிப்புகள் மீது தாக்குவதற்கு M270 மற்றும் M142 HIMARS போன்ற பல ராக்கெட் ஏவுதள அமைப்புகளை உக்ரைன் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக ஆதரவு அளித்து வரும் ஸ்பெயின், தற்போது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெற்கு உக்ரைன் அணு மின் நிலையத்தின் மீது ரஷிய ஏவுகணை தாழ்வாக பறந்ததாகவும், தலைநகர் கீவ் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையாக இருக்கலாம் என அணு மின் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.