உலகம்

இந்தியாவுக்கு எதிரான காரியங்களுக்கு இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: ரணில் விக்ரமசிங்கே

Published On 2023-06-28 03:35 GMT   |   Update On 2023-06-28 03:35 GMT
  • சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ ஒப்பந்தம் எதுவும் கிடையாது.
  • இலங்கையில் சீனர்கள் 1,500 ஆண்டுகளாக இருக்கிறார்கள்.

கொழும்பு :

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் பிரான்ஸ் அரசு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாங்கள் நடுநிலை நாடு. அதே சமயத்தில், இந்தியாவுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற உண்மையை தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கையில் சீனர்கள் 1,500 ஆண்டுகளாக இருக்கிறார்கள். ஆனால், சீன ராணுவ தளம் எதுவும் அங்கு இல்லை.

சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ ஒப்பந்தம் எதுவும் கிடையாது. இனிமேலும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ராணுவ ஒப்பந்தத்தை சீனா விரும்புவதாக நாங்கள் கருதவில்லை.

இலங்கையில் உள்ள அம்பந்தொட்டை துறைமுகம், சீன வர்த்தகர்களுக்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் பாதுகாப்பு, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

அம்பந்தொட்டை துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தவில்லை. இலங்கை தென்பிராந்திய கடற்படை தலைமையகத்தை அம்பந்தொட்டைக்கு மாற்ற போகிறோம். அங்கு ஒரு படைப்பிரிவை நிறுத்தி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, சீனாவின் 'யுவான் வங்-5' என்ற அதிநவீன உளவு கப்பலை அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிறுத்திவைக்க இலங்கை அரசு அனுமதி அளித்தது.

அந்த கப்பல், இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்களை உளவு பார்க்கும் என்ற அச்சத்தால், இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News