லட்சக் கணக்கான உயிர்களை பணயம் வைக்க கூடாது - சிந்து நதிநீர் ஒப்பந்தம் பற்றி பாகிஸ்தான் பிரதமர்
- இந்தியா தங்கள் சொந்த பாதுகாப்பு தோல்வியை மறைக்க பாகிஸ்தான் மீது வீண் பழி போடுகிறது.
- சிவப்புக் கோட்டை தாண்ட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
கடந்த ஏப்ரல் 22 ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யட்டனர். எனவே பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.
1960 இல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் சிந்து நதியின் துணை நதிகளில் இருந்து பாகிஸ்தான் தண்ணீர் பெற்று வந்தது. இந்த நீரையே அந்நாட்டில் விவசாயம் மற்றும் மற்ற தேவைகளுக்கு மக்கள் நம்பியுள்ளனர். இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை முறித்து சில அணைகளில் இந்தியா நீரை நிறுத்தியது.
ஆனால் பயங்கரவாத ஆதரவு குற்றசாட்டை மறுத்து வரும் பாகிஸ்தான், இந்தியா தங்கள் சொந்த பாதுகாப்பு தோல்வியை மறைக்க பாகிஸ்தான் மீது வீண் பழி போடுவதாக தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில் இந்தியா தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துவதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.
தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடந்து வரும் சர்வதேச பனிப்பாறை பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார்.
அவர் கூறியதாவது, 'சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியாவின் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோத முடிவு மிகவும் வருந்தத்தக்கது. குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது. பாகிஸ்தான் இதை அனுமதிக்காது. சிவப்புக் கோட்டை தாண்ட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்' என்று கூறினார்.