மாயையான ஆபத்தான ஆத்திரமூட்டும் பேச்சு - ராஜ்நாத் சிங் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்
- ஆக்கிரமிப்புவாத இந்துத்துவா அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.
- ஆத்திரமூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு ராஜ்நாத் சிங் மற்றும் பிற இந்தியத் தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
சிந்து மாகாணம் இந்தியாவுக்கு சொந்தமாகலாம் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் பேசியதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் மாயையான மற்றும் ஆபத்தான கருத்துக்களை பாகிஸ்தான் வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தகைய அறிக்கைகள் யதார்த்தத்தை சவால் செய்ய முயலும் ஆக்கிரமிப்புவாத இந்துத்துவா அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. மேலும் அவை சர்வதேச சட்டம், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் மற்றும் நாடுகளின் இறையாண்மையை மீறுகிறது" என்று தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆத்திரமூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு ராஜ்நாத் சிங் மற்றும் பிற இந்தியத் தலைவர்களை கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு இணங்க, ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு காண நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நீதி, சமத்துவம் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தியாவுடனான அனைத்து மோதல்களுக்கும் அமைதியான தீர்வு காண பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த காலங்களைப் போலவே, பாகிஸ்தான் தனது பாதுகாப்பு, தேசிய சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.