உலகம்

நிதியுதவி இல்லாமல் பஹல்காம் தாக்குதல் நடந்திருக்க முடியாது - பகீர் கிளப்பும் FATF அறிக்கை

Published On 2025-06-17 03:00 IST   |   Update On 2025-06-17 03:01:00 IST
  • பாகிஸ்தானை FATF இன் "சாம்பல் பட்டியலில்" (grey list) மீண்டும் சேர்க்க இந்திய அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
  • தற்போது, FATF இன் சாம்பல் பட்டியலில் 24 நாடுகள் உள்ளன.

உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நிதி ஆதாரங்கள் மற்றும் நிதியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கான வழிகள் இல்லாமல் இத்தகைய தாக்குதல்கள் நிகழ்த்துவதற்கு சாத்தியமில்லை என FATF வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"பயங்கரவாத தாக்குதல்கள் உலகெங்கிலும் உயிர்களைக் குடித்து, காயப்படுத்தி, அச்சத்தை ஏற்படுத்துகின்றன. 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை FATF ஆழ்ந்த கவலையுடன் கண்டிக்கிறது. இது போன்ற மற்றும் சமீபத்திய பிற தாக்குதல்கள் பணம் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களிடையே நிதியை நகர்த்துவதற்கான வழிகள் இல்லாமல் நடந்திருக்க முடியாது," என்று FATF அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே ஏப்ரல் 22 தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கையாக, பயங்கரவாத நிதியுதவியைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பாகிஸ்தானை FATF இன் "சாம்பல் பட்டியலில்" (grey list) மீண்டும் சேர்க்க இந்திய அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்பல் பட்டியல் என்பது, அந்த நாடுகள் பயங்கரவாத நிதியுதவியைத் தடுப்பதில் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் ஒரு செயல்முறையாகும். இது அந்த நாடுகளின் உலகளாவிய நிதி நிலை மற்றும் சர்வதேச நிதியுதவிக்கான அணுகலை பாதிக்கும்.

முதன்முதலில் 2008 இல் பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டது, 2010 இல் நீக்கப்பட்டது. பின்னர் 2012 இல் மீண்டும் சேர்க்கப்பட்டது. 2015 இல் மீண்டும் நீக்கப்பட்ட பிறகு, 2018 இல் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அக்டோபர் 2022 வரை பட்டியலில் இடம்பெற்றிருந்தது. தற்போது, FATF இன் சாம்பல் பட்டியலில் 24 நாடுகள் உள்ளன.

Tags:    

Similar News