முற்றியது மோதல்.. கனடா மீது நம்பிக்கை இல்லை - தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாக இந்தியா அறிவிப்பு!
- அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை வேண்டுமென்றே கனடா கொச்சைப்படுத்துகிறது
- ஆசியான் மாநாட்டில் மோடியும் கனடா அதிபர் ட்ரூடோவும் சந்தித்த சில நாட்களிலேயே மோதல் வலுத்துள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கனடாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசின் தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனைத்தொடர்ந்து இந்தியா- கனடா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. விசா ஒப்புதல் உள்ளிட்ட சேவைகளும் சற்று காலத்துக்கு முடங்கின. பின்னர் இரு நாடு உறவும் சுமூகமாக சூழளுக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதுபோல் நிஜ்ஜார் கொலை பிரச்சனையை கனடா மீண்டும் கிளறியுள்ளது. அதாவது, நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்தியத் தூதருக்கு தொடர்புள்ளதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது. இதை வலுவாக மறுத்த இந்தியா இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான கனடா தூதருக்கு சம்மன் அனுப்பியது.
கனடா தெரிவித்துள்ள இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் இதுவரை இல்லாத வகையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்று கூறி, டெல்லியில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியது. மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை வேண்டுமென்றே கனடா கொச்சைப்படுத்துவதாகவும் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு குறுகிய ஆதாயங்களுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக இந்தியா தரப்பில் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
இதோடு நிற்காமல், கனடாவின் மீது இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். இனியும் கனடா அரசை நம்பிக்கொண்டிருக்கப்போவதில்லை என்றும் கனடாவில் உள்ள இந்தியத் தூதரக உயர் ஆணையர் சஞ்சய் வர்மா உள்ளிட்ட முக்கிய தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெறுவதாக இந்தியா பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இத்துடன், "கனடா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். எங்கள் தூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய கனடா அரசாங்கத்தின் நடவடிக்கை மீது நம்பிக்கை இல்லை" என்று கூறிய இந்தியா, கனடாவில் உள்ள இந்திய தூதரக உயர் ஆணையர் சஞ்சய் வர்மா உட்பட குறிப்பிட்ட தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் 11 அன்று லாவோசில் நடந்த ஆசியான் மாநாட்டில் மோடியும் கனடா அதிபர் ட்ரூடோவும் சந்தித்த சில நாட்களிலேயே இருநாடுகளுக்கு இடையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.