மனைவியுடன் மதுரோ நாடுகடத்தல்.. வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் டிவி ஷோ போல இருந்தது - டிரம்ப்
- இந்த ராணுவ நடவடிக்கையில் ஒரு அமெரிக்க வீரர் கூட கொல்லப்படவில்லை.
- அவர்கள் எங்களது வலிமையைக் கண்டு பயந்துவிட்டார்கள்.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.
இதன்பின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், மதுரோ மற்றும் அவரின் மனைவி அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்ட்டு நாடுகடத்தப்பட்டதாக அறிவித்தார்.
அமெரிக்காவில் மதுராவுக்கு எதிராக எதிராக போதை பொருள் பயங்கரவாத சதி திட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இருவரும் அமேரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.
அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டிரம்ப் Fox news சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இனி வெனிசுலாவின் எதிர்காலத்தை அமெரிக்காவே தீர்மானிக்கும், அங்குள்ள எண்ணெய் இருப்பை அமெரிக்க நிறுவனங்கள் நிர்வகிக்கும், அங்கு அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அமெரிக்க ராணுவம் அங்கு இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த தாக்குதல் குறித்து பேசிய அவர், "இந்த ராணுவ நடவடிக்கையில் ஒரு அமெரிக்க வீரர் கூட கொல்லப்படவில்லை. யாரும் காயமடையவில்லை. இது ஒரு மிகப்பெரிய வெற்றி.
இந்த முழு நடவடிக்கையும் ஒரு டிவி ஷோ போல இருந்தது. அவ்வளவு துல்லியமாக இது நடந்தது.
நாங்கள் இந்தத் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினோம். நான் இங்கே அமர்ந்து கொண்டு இவை அனைத்தையும் ஒரு திரையில் பார்த்துக் கொண்டிருந்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது.
அங்கே பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. அவர்கள் எங்களது வலிமையைக் கண்டு பயந்துவிட்டார்கள். எந்த ஒரு உயிரிழப்பும் இன்றி அந்த சர்வாதிகாரியை நாங்கள் பிடித்துவிட்டோம்.
இது அமெரிக்க ராணுவ வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த தருணம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தோமோ, அதை மிகச் சரியாகச் செய்து முடித்துவிட்டோம்" என்று தெரிவித்தார்.