உலகம்

நிவாரண பொருட்களை வாங்க குவிந்த காசா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் பலி - பலர் படுகாயம்

Published On 2025-05-28 15:35 IST   |   Update On 2025-05-28 15:39:00 IST
  • ஐ.நா மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகள் இந்த புதிய GHF அமைப்பை நிராகரித்துள்ளன.
  • இஸ்ரேல் மக்களை கட்டுப்படுத்த ஒரு ஆயுதமாக உணவைப் பயன்படுத்த இந்த GHF அனுமதிக்கிறது.

உதவி மையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், 48 பேர் காயமடைந்தனர் என்று காசா அதிகாரிகள் தெரிவித்தனர்

கடந்த மார்ச் மாதம் முதல் காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களும் செல்ல விடாமல் இஸ்ரேல் தடுத்தது. இதனால் அங்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில் பேரழிவை ஏற்படுத்தும் பஞ்சத்தை காசா எதிர்கொள்வதாக சர்வதேச சமூகம் கவலை தெரிவித்தது.

இதைடுத்து கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை எதிர்த்து கூட்டாக அறிக்கை விட்டன. தொடர்ந்து வழங்கப்பட்ட அழுத்தத்தால் காசாவுக்குள் சொற்ப அளவிலான உதவிகளை அனுப்ப இஸ்ரேல் வழிவிட்டது.

பல நாட்களாக பட்டினியையும், அத்தியவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் பற்றாக்குறையையும் எதிர்கொண்ட காசா மக்கள், தங்களுக்கு கிடைக்கும் சொற்ப அளவிலான உதவிப் பொருட்களை பெற்றுக்கொள்ள சாரை சாரையாக உதவி மையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

இந்த சூழலில் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஆதரவு அறக்கட்டளை Gaza Humanitarian Foundation (GHF) காசா பகுதியில் அமைக்கப்பட்ட புதிய உதவி விநியோக மையத்தை ஆக்கிரமித்த கூட்டத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார். மேலும் 48 பேர் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன பிரதேசங்களுக்கான ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைவர் அஜித் சுங்கை ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் இந்த் துப்பாக்கிசூட்டால் 47 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே அமெரிக்க, இஸ்ரேல் பின்னணியில் இயங்கும் GHF அமைப்பு உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையை மற்ற அமைப்புகளில் இருந்து கையகப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஹமாஸ் பொருட்களைத் பெறுவதை தடுக்க GHF வலையமைப்பை நிறுவ இஸ்ரேல் உதவியதாகக் கூறுகிறது, நான்கு மையங்களை நிறுவியுள்ளதாக GHF கூறுகிறது, அவற்றில் இரண்டு செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த உதவி மையங்களுக்கு வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பாக ஆயுதமேந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 

ஐ.நா மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகள் இந்த புதிய GHF அமைப்பை நிராகரித்துள்ளன. இது காசாவின் 2.3 மில்லியன் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்றும், இஸ்ரேல், மக்களை கட்டுப்படுத்த ஒரு ஆயுதமாக உணவைப் பயன்படுத்த இந்த GHF அனுமதிக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

ஐ.நா. மற்றும் பிற மனிதாபிமான குழுக்கள் GHF இன் அமைப்பில் பங்கேற்க மறுத்துவிட்டன. இந்த அமைப்பு மனிதாபிமானக் கொள்கைகளை மீறுவதாகக் கூறின. சில விநியோக மையங்களுக்கு  மக்களை நகர்த்துமாறு கட்டாயப்படுத்துவதன் மூலம் மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்ய இஸ்ரேலால் இது பயன்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News