இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பாலஸ்தீன மக்களுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்ட கோழைகள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்கா பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின், இஸ்ரேல் ராணுவ மந்திரியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது போர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதித்ததற்கு பாராட்டும் தெரிவித்தார். பிணைக்கைதிகளை விடுவிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலைக்குரிய விஷயம் என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை தூதர் ரவீந்திரா நேற்று ஐ.நா.வில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 6 ஆயிரத்து 546 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 103 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 54 ஆக அதிகரித்துள்ளது.
காசாவில் எரிபொருள் தீர்ந்து, அனைத்து மருத்துவமனைகளும் முடங்கி, சிகிச்சை பெறுபவர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனால் காசாவுக்குள் எரிபொருளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
நீங்கள் அமைதியாக வாழ விரும்பினால் பிணைக்கைதிகள் பற்றிய விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என ஹமாஸ் அமைப்பிடம் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வலியுறுத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பதவியை அன்டோனியோ குட்டரெஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என இஸ்ரேல் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 7-ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 பேர் மாயமாகி உள்ளனர் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்தார். அப்போது பேசிய மேக்ரான், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உலக அளவில் ஒன்றிணைந்தது போல, ஹமாசுக்கு எதிரான போரிலும் பிரான்ஸ் ஒன்றிணையும் என தெரிவித்தார்.
ஹமாசுடனான போரில் மனித உயிரிழப்பு நிகழ்வை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை எதிர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.