இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு புறப்பட்டார்.
காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது நடந்த வான்வழி தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்கள், 18 நேபாள குடிமக்களுடன் 5-வது விமானம் டெல்லி வந்தடைந்தது. அவர்களை மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்றார்.
தெற்கு காசாவில் குடிநீர், உணவு, மின்சாரம், மருந்து பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக எகிப்து உதவி பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளது.
இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் அஜய் திட்டம் மூலமாக இந்திய ர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்தியாவுக்கு வரும் விமானத்தில் நேபாள நாட்டை சேர்ந்த 18 பேரும் அழைத்து வரப்படுவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் (Naor Gilon) இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர், "இந்தியா மீது இஸ்ரேல் நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலில் மிகவும் விரும்பப்படும் தலைவர். பிற நாடுகளை விட இந்தியாவின் மீதுதான் இஸ்ரேலியர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர்" என்றார்.
காசாவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. காசாவில் கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில், காசாவில் தண்ணீர் மூலம் பரவும் நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் பலியானோர் எண்ணிக்கை 4,200-ஐ கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேரும், பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,808 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தவர் ஒசாமா அல் மசினி. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒசாமா அல் மசினி பலியானார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷியாவின் வரைவு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கவுன்சில் நிராகரித்துள்ளது. தீர்மானத்தில் ஹமாஸ் குறித்து குறிப்பிடவில்லை, ஹமாஸை முறையாக விமர்சிக்கவில்லை என அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.