இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
காசாவிற்குள் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். போரால் உருக்குலைந்த காசாவில் மனிதாபிமான உதவிகளை அனுப்ப ஒப்புக்கொண்ட இஸ்ரேல் நிலைப்பாட்டை வரவேற்கிறோம் என அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
இஸ்ரேலில் நடந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம். இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இங்கிலாந்து குடிமக்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.
காசா மீதான தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார் என வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 41 நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு மற்றும் மாயமானதாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், 105 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 103 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் இது ஹமாஸூக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் மட்டுமல்ல, இது உலகளாவிய போர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் படை ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு, மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுது நேரத்திற்கு முன்பு காசாவில் இருந்து ஹமாஸ் ராக்கெட் ஏவியதாக தெரிவித்துள்ளது.
ஹமாசுக்கு எதிரான போரில் இதுவரை சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வெளிநாட்டினர் காசாவை விட்டு வெளியேறுவதற்கு ஈடாக மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் போரிட தயார் என பாடா என்ற பிரபல வலை தொடரில் நடித்து வந்த இஸ்ரேல் நாட்டு நடிகை ரோனா-லீ ஷிமோன் பேட்டியில் கூறியுள்ளார்.
தெற்கு காசாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. ராஃபா கிராசிங் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், காசாவில் இருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்காக தாக்குதல் நிறுத்தப்பட உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லவும், காசாவில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையிலும் காசா- எகிப்து எல்லையில் ராஃபா கிராசிங் இன்று திறக்கப்படுகிறது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாசைக் கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும், ஆனால் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.