உலகம்

தெஹ்ரான், நோபோனியாட் சதுக்க கட்டிடங்கள் சேதமடைந்த காட்சி 

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 78 பேர் உயிரிழப்பு.. 320 பேர் படுகாயம் - தொடரும் மோதல்

Published On 2025-06-14 07:59 IST   |   Update On 2025-06-14 07:59:00 IST
  • இதற்குப் பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் ஈரான் தாக்கியது.
  • இஸ்ரேல் பல ஈரானிய ஏவுகணைகளை அமெரிக்காவின் உதவியுடன் இடைமறித்ததாகக் கூறியது.

இஸ்ரேல் நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதில் ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டன. தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட பல நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டன.

இந்தத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் ஐ.நா. தூதர் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்குப் பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" (Operation True Promise) என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 34 பேர் காயமடைந்தனர்.

இன்று (சனிகிழமை) அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இஸ்ரேல் பல ஈரானிய ஏவுகணைகளை அமெரிக்காவின் உதவியுடன் இடைமறித்ததாகக் கூறியது.

டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வான்வழி சைரன்கள் ஒலித்தன, மத்திய இஸ்ரேல் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டன.

இரு நாடுகளும் மேலும் தாக்குதல்களைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.  

Tags:    

Similar News