2025 - ஒரு பார்வை
null

2025 REWIND: 286 நாட்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ்.. பூமிக்குத் திரும்பிய சாதனைப் பயணம்

Published On 2025-12-23 11:00 IST   |   Update On 2025-12-23 11:56:00 IST
  • அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
  • ஸ்டார்லைனர் கைவிடவே, நீண்ட காத்திருப்புக்கு பிறகு உலகப் பணக்காரர் எலான் மஸ்க் கைகொடுத்தார்.

சுனிதா வில்லியம்ஸ்

உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.

ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது.

அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998-ல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அழைத்துக்கொண்டது.

2006 ஆம் ஆண்டு முதல்முறையாக அவர் விண்வெளிக்கு சென்றார். விண்ணை தொட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக மண்ணைத்தொட்டார். அவரது சாதனையை பாடப்புத்தகங்கள் பேசின.

2024-25 பயணம்:

கடந்த ஆண்டு 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரும்(62) மற்றும் சில குழுவினருடன் நாசாவின் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.

அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 286 நாட்கள் (9 மாதங்கள்) விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

டிராகன் 

ஸ்டார்லைனர் கைவிடவே, நீண்ட காத்திருப்புக்கு பிறகு உலகப் பணக்காரர் எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் உடைய டிராகன் ப்ரீடம் விண்கலம் மூலம் இந்த ஆண்டு இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

அன்றைய தினம் அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

அதன் பின் 10 நாட்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் அவர்கள் இருந்தனர். இதன்பின் அமெரிக்க அதிபர் மாளிகையில் டிரம்ப் அவர்களை அழைத்துப் பாராட்டினார்.

அனுபவம்

தனது விண்வெளி அனுபவம் பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்த சுனிதா, "விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் வில்மோர் அருமையான புகைப்படங்களை எடுத்தார்.

கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேற்பரப்பில் செல்லும்போது அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவு நேரங்களில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிந்தபடி இருக்கும்" என்று தெரிவித்தார்.

விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தப்படி கையாண்டார் விண் தேவதை சுனிதா.

விண்வெளிக்கு சென்ற சுனிதா விண்ணில் அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தார். சுமார் 30 ஆண்டுகள் நாசா நடத்திய பல சோதனைகளில் சுனிதா வில்லியம்ஸ் சாதனைகள் படைத்தார்.

சுனிதா வில்லியம்ஸ் இந்த பயணத்தின்போது ஜனவரி 2025-ல் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். விண்வெளியில் அதிக நேரம் 'விண்நடை' மேற்கொண்ட வீராங்கனை என்ற பெக்கி விட்சனின் சாதனையை சுனிதா முறியடித்தார்.

அவர் மொத்தம் 62 மணிநேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, உலக அளவில் 4-வது இடத்தைப் பிடித்தார். 

Tags:    

Similar News