உலகம்

நாங்கள் இந்தியாவை பெரிதும் நம்புகிறோம் - மனம் திறக்கும் இஸ்ரேல் தூதர்

Published On 2023-10-17 13:43 GMT   |   Update On 2023-10-17 13:43 GMT
  • இஸ்ரேலில் பிரதமர் மோடி மிகவும் விரும்பப்படும் தலைவர்
  • பிரதமர் மோடி உடனடியாக கண்டனம் தெரிவித்தார்

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போர் 11-வது நாளாக தொடர்கிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் (Naor Gilon) இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து கருத்து தெரிவித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் சிக்கலை தீர்க்க இஸ்ரேல் தற்போது முயலவில்லை. இப்பொழுது புதியதாக எழுந்திருக்கும் தீவிர பிரச்சனையை தீர்க்க போராடுகிறோம். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்தால்தான் மீண்டும் இது போன்ற தாக்குதல்கள் நடக்காது.

இந்தியா மீது இஸ்ரேல் நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலில் மிகவும் விரும்பப்படும் தலைவர். பிற நாடுகளை விட இந்தியாவின் மீதுதான் இஸ்ரேலியர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவும் எங்கள் பக்கம் நின்றது. மோடி உடனடியாக கண்டனம் செய்தார். பிற நாட்டினர் உடனடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை; பிறகுதான் தெரிவித்தனர்.

அமெரிக்கர்கள் எங்களுக்கு துணை நிற்கின்றனர். மேலும் அமெரிக்கர்களுக்கு இந்தியாவுடன் தற்போது வலுவான உறவு உள்ளது. நாங்கள் இந்தியாவை நம்புவதால், அவர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிடுவதை நாங்கள் வரவேற்கிறோம்.

சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர். அதில் சுமார் 1000 இந்தியர்கள் மட்டுமே இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பினார்கள்; அவர்களையும் நாங்கள் பத்திரமாக அனுப்பி வைத்தோம்.

இவ்வாறு நவோர் கிலான் தெரிவித்தார்.

Tags:    

Similar News