உலகம்

அதிகரிக்கும் நெருக்கம்.. மாஸ்கோவில் மந்திரிகள் முக்கிய சந்திப்பு - ரஷியா செல்லும் ஜெய்சங்கர்!

Published On 2025-08-13 22:47 IST   |   Update On 2025-08-13 22:54:00 IST
  • அண்மையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றிருந்தார்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷிய அதிபர் புதின் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்.

ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததில் இருந்து சர்வதேச அரசியலில் இந்தியாவின் நகர்வுகள் மாறி வருகின்றன.

ரஷியா - இந்தியா இரு நாடுகளுக்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்புகள் மற்றும் வருகைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

அண்மையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றிருந்தார்.

இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையே மற்றொரு முக்கிய சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த மாதம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி மாஸ்கோவில் இருவரும் சந்திப்பார்கள். இதை ரஷிய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

அறிக்கையில், இரு தலைவர்களும் இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் சர்வதேச மன்றங்களில் ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாடு மற்றும் ஜூலை 15 அன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி, இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் மாஸ்கோவிற்கு விஜயம் செய்து ரஷிய துணை வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷிய அதிபர் புதின் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு வர இருக்கிறார். 

Tags:    

Similar News