உலகம்

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப் உடன் பகிர்ந்து கொள்கிறேன் - வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் அறிவிப்பு

Published On 2026-01-07 05:23 IST   |   Update On 2026-01-07 05:23:00 IST
  • அமெரிக்காவுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றத் தயார்.
  • மச்சாடோவுக்கு வெனிசுலா நாட்டுக்குள் போதிய மரியாதையோ ஆதரவோ இல்லை

வெனிசுலா மீது நேற்று முன் தினம் திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.

வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.

அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் மதுரோவுக்கு நேர்ந்ததை விட மோசமான முடிவு டெல்சிக்கு ஏற்படும் என எச்சரித்த டிரம்ப், மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட தயங்கமாட்டேன் என்று மிரட்டல் விடுத்தார்.

இதற்கிடையே இந்த எச்சரிக்கைகளுக்குப் பதிலளித்த டெல்சி, வெனிசுலா தனது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் என்று தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்காவுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே கண்ணியமான உறவை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

நிலைமை இப்படி இருக்க, வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரும், 2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ தனது விருதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அர்ப்பணிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

வெனிசுலா அதிபர் மதுரோவைப் பிடிப்பதற்காக ஜனவரி 3-ஆம் தேதி அமெரிக்கா நடத்திய தாக்குதலைப் பாராட்டிய மச்சாடோ, "நீதி சர்வாதிகாரத்தை வென்ற நாள் இது. இந்தச் சாதனையைச் செய்த டிரம்புக்கு எனது நோபல் பரிசை அர்ப்பணிக்கிறேன், அவருடன் இதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மதுரோவின் வீழ்ச்சிக்குப் பிறகு தான் ஆட்சியைக் கைப்பற்றலாம் என மச்சாடோ எதிர்பார்த்தார். ஆனால், டிரம்ப் அவருக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டார்.

பேட்டி ஒன்றில் பேசிய டிரம்ப், "மச்சாடோவுக்கு வெனிசுலா நாட்டுக்குள் போதிய மரியாதையோ ஆதரவோ இல்லை" என்று வெளிப்படையாகக் கூறி மச்சாடோவை ஓரங்கட்டியுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் உட்பட 6 போர்களை நிறுத்தியதற்காக தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் கூறி வந்த நிலையில் மச்சோடாவுக்கு வழங்கப்பட்டது தான் டிரம்ப் தற்போது அவரை ஓரங்கட்ட காரணம் என வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

ஆனால் மச்சாடோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கும், அவரைப் புறக்கணித்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அதே சமயம், மச்சாடோ நோபல் பரிசு வென்றிருக்கவே கூடாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News