வங்கதேசத்தில் இந்து தொழிலதிபர் அடித்துக்கொலை!
- சம்பவ இடத்திலேயே சரிந்துவிழுந்து உயிரிழந்தார்.
- வன்முறைச் சம்பவங்களுக்கும், இந்தப் படுகொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை
வங்கதேசத்தில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் லிட்டன் சந்திர கோஷ் (55) என்ற இந்து தொழிலதிபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். காஜிப்பூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் நேற்று இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒரேக் குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவபன் மியா (55), அவரது மனைவி மஜேதா (45), அவர்களது மகன் மாசூம் மியா (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாசூம் மியா ஒரு வாழைப்பழத் தோட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்து ஒரு தார் வாழைப்பழம் காணாமல் போயுள்ளது. இதனால் அதை கடைகளில் தேடியுள்ளனர். அப்போது லிட்டன் சந்திர கோஷின் உணவகத்தில் அவற்றை மாசூம் கண்டெடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல் கொலையில் முடிந்துள்ளது.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் லிட்டனை அடித்தும், உதைத்தும் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்துவிழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வங்கதேசத்தில் சமீபகாலமாக இந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கும், இந்தப் படுகொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று உள்ளூர் ஊடகமான தி டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.