ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அமீர் ஹம்சா மீது துப்பாக்கி சூடு
- மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பாதுகாப்பின் கீழ் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்.
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் அமீர் ஹம்சா(வயது 66). அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
இந்த நிலையில் லாகூரில் வசித்து வந்த அமீர் ஹம்சா வீட்டில் இருந்தபோது ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அவரது உடம்பில் காயங்கள் இருந்தன. அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
படுகாயம் அடைந்த அவரை மீட்டு லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பாதுகாப்பின் கீழ் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைபுல்லா காலித் 3 நாட்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அந்த அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப் பட்டுள்ளது.
அமீர் ஹம்சா, இந்தியாவில் நடந்த தாக்குதல் பின்னணியில் இருந்துள்ளார். இவரும் சைபுல்லாவும் 2005-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டனர்.
அமீர் ஹம்சா, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ஐ.நா.வால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத் மற்றும் அப்துல் ரகுமான் மக்கி ஆகியோருக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார்.