தாய்லாந்தில் ரெயில் மீது ராட்சத கிரேன் விழுந்து தடம் புரண்டு விபத்து- 22 பேர் உயிரிழப்பு
- கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின.
- ரெயிலுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 195 பேர் பயணம் செய்தனர்.
அந்த ரெயில் நக்கோன் ராட்சசிமா மாகாணம் சிக்கியோ மாவட்டத்தில் விபத்தில் சிக்கியது. உயர்த்தப்பட்ட அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது.
இதில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின. மேலும் ரெயில் தீப்பிடித்து எரிந்தது.
உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ரெயிலுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ரெயிலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டது என்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தாய்லாந்தின் பாங்காக்கை லாவோஸ் வழியாக சீனாவின் குன்மிங்குடன் இணைக்கும் அதிவேக ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக சிக்கியோ மாவட்டத்தில் கட்டுமான பணி நடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இத்திட்டம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.