உலகம்

காசா தாக்குதல்: பிரிட்டிஷாருக்கு அவமானம் - இஸ்ரேலுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தும் இங்கிலாந்து

Published On 2025-05-20 20:40 IST   |   Update On 2025-05-20 20:40:00 IST
  • காசாவில் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மீது இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.
  • வெளிப்படையாகச் சொன்னால், இது பிரிட்டிஷ் மக்களின் மதிப்புகளுக்கு அவமானம்.

இஸ்ரேல் முழு காசா பகுதியையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்று கடந்த வாரம் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். மேலும் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து, காசாவிற்குள் மருத்துவப் பொருட்கள், உணவு மற்றும் எரிபொருள் நுழைவதை இஸ்ரேல் தடுத்துள்ளது, இதனால் சர்வதேச நிபுணர்கள் வரவிருக்கும் பஞ்சம் குறித்து எச்சரித்தனர்.

இந்நிலையில் நட்பு நாடுகளில் இருந்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டு, நேதன்யாகுவின் திட்டத்திற்கும், காசாவுக்குள் கடந்த 11 வாரங்களாக உணவு மற்றும் உதவிப்பொருட்கள் செல்ல விடாமல் செய்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதன் விளைவாக சொற்ப அளவிலான உணவு மற்றும் உதவிகளை காசாவுக்குள் இஸ்ரேல் அனுமதித்துள்ளது. இருப்பினும் அதை கூட மக்களிடம் கொண்டு சேர்ப்பது சிக்கலாக உள்ளதாக ஐநா தெரிவித்தது.

இந்த சூழலில் இஸ்ரேலுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக இங்கிலாந்து அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இங்கிலாந்து இஸ்ரேல் தூதருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி பேசுகையில்,

"இந்தப் புதிய சீரழிவை பார்த்து அமைதியாக இருக்க முடியாது. இது நமது இருதரப்பு உறவை ஆதரிக்கும் கொள்கைகளுடன் பொருந்தாது. வெளிப்படையாகச் சொன்னால், இது பிரிட்டிஷ் மக்களின் மதிப்புகளுக்கு அவமானம்.

எனவே, இந்த இஸ்ரேலிய அரசாங்கத்துடனான புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை நாங்கள் நிறுத்திவிட்டதாக அறிவிக்கிறேன்" என்று தெரிவித்தார். இதற்கிடையே காசாவில் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மீது இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.  

Tags:    

Similar News