உலகம்

முன்னாள் பிரதமர் சின்வத்ரா சிறப்பு பரோலில் சிறையில் இருந்து விடுதலை

Published On 2024-02-18 07:01 GMT   |   Update On 2024-02-18 07:01 GMT
  • அரிசி மானிய வழக்கில் சிறை தண்டனை பெற்றார் சின்வத்ரா
  • மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் சின்வத்ராவின் தண்டனையை 1 ஆண்டாக குறைத்தார்

தென்கிழக்கு ஆசியாவில், இந்தோசீன தீபகற்பத்தில் உள்ள நாடு, தாய்லாந்து. இதன் தலைநகரம், பாங்காக் (Bangkok).

தாய்லாந்தில், 2001 முதல் 2006 வரை பிரதமராக இருந்த தக்சின் சினவத்ரா (Thaksin Shinawatra) மீது அரிசி மானிய திட்டத்தில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் தக்சினுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க, தக்சின், 2008ல் தாய்லாந்தை விட்டு வெளியேறி, 15 ஆண்டுகள் அயல்நாடுகளில் தங்கி இருந்தார்.

கடந்த 2023ல் மீண்டும் நாடு திரும்பினார்.

தாயகம் திரும்பிய தக்சினுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், தக்சின் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சிறையிலிருந்து 6 மாதங்கள் மருத்துவமனையிலேயே காவலில் வைக்கப்பட்டிருந்தார்.


தக்சினின் உடல்நல குறைபாடு காரணமாக அவருக்கு விதிக்கப்பட்ட 8-ஆண்டுகால சிறை தண்டனையை, தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் (Maha Vajiralongkorn), 1 ஆண்டாக குறைத்தார்.

இதனை தொடர்ந்து தக்சின் சினவத்ராவுக்கு சிறப்பு பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, தற்போது 76 வயதாகும் தக்சின் இன்று பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.

பாங்காக் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த தக்சின் தனது காரில் புறப்பட்டு சென்றார். தக்சினை அவரது மகள் பெடோங்டார்ன் சினவத்ரா (Paetongtarn Shinawatra) வரவேற்று தங்கள் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.


தக்சின், 2 முறை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.

தாய்லாந்தில் நடைபெறும் பிரதமர் சிரெத்தா தவிசின் (Srettha Thavisin) தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு, தக்சின் குடும்பத்தார் பின்புலமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News