உலகம்

எதிரிகள் எனது வார்த்தைகளை தவறாக சித்தரிக்கின்றனர்.. மன்னிப்பு கேட்டது குறித்து ஈரான் அதிபர் | Masoud Pezeshkian

Published On 2026-03-08 15:13 IST   |   Update On 2026-03-08 15:13:00 IST
  • ஈரான் தோற்கடிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
  • பலியானவர்களின் எண்ணிக்கை 1300-ஐ கடந்துள்ளது.

இஸ்ரேல் - அமெரிக்கா ஈரான் மீது கடந்த ஒரு வார காலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மீதும் அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகள் மீதும் அங்குள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் வளைகுடா நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டார். ஈரான் மீது அங்கிருந்து தாக்குதல் நடத்தப்படாத வரை நாங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று தெரிவித்தார்.

ஈரான் அதிபர் மன்னிப்பு கேட்டது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், தாக்குதலுக்கு உள்ளாகி தோற்கடிக்கப்பட்ட ஈரான், மன்னிப்பு கேட்டு அதன் மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் சரணடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அண்டை நாடுகளுடனான ஈரானின் உறவில் விரிசலை ஏற்படுத்த எதிரிகள் தனது வார்த்தைகளைத் தவறாகச் சித்தரிப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளிலிருந்து ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படாதவரை, அந்த நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் ராணுவ நடவடிக்கை எடுக்காது என்றே தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.

மேலும், "அண்டை நாடுகளை நாங்கள் சகோதரர்களாகவே பார்க்கிறோம். பிராந்திய நாடுகளிடையே பிளவை ஏற்படுத்த அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அனுமதிக்கக் கூடாது" என்று வலியுறுத்தினார். 

இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவோம் என ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லாரிஜானி எச்சரித்துள்ளார்.

"எங்கள் தலைவரின் இரத்தத்திற்கு நாங்கள் இரக்கமின்றிப் பழிவாங்குவோம். இதற்கு டிரம்ப் விலை கொடுக்க வேண்டியிருக்கும் " என்று லாரிஜானி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது, ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார மையங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஈரானின் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1300-ஐ  கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Tags:    

Similar News