#IranWar ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் சரமாரி குண்டுவீச்சு
- அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- ஈரான் முழுவதும் ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தின.
தெக்ரான்:
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் இன்று 9-வது நாளாக நீடிக்கிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தும் இந்த தாக்குதலில் ஈரானின் ராணுவ நிலைகள், அரசாங்கம் தொடர்பான கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இப்போரில் முதல் முறையாக ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் குறி வைக்கப்பட்டன.
தலைநகர் தெக்ரானின் ஷாஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த எண்ணெய் கிடங்கு தீப்பிடித்தது. அங்கு விண்ணை முட்டும் அளவுக்கு புகை மண்டலம் எழும்பியது.
அதேபோல் தெக்ரானின் கோஹாக்கில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் மேற்கு தெக்ரானின் கராஜில் உள்ள எண்ணெய் கிடங்கு ஆகியவை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் அந்த எண்ணெய் கிடங்குகள் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிகின்றன.
அதே போல் அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதலில் 4 ஊழியர்கள் பலியானார்கள்.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, ஈரான் அரசாங்கம் தனது ராணுவப் படைகள், ராணுவ உள்கட்டமைப்பை இயக்க இந்த எண்ணெய் கிடங்குகளை அடிக்கடி பயன்படுத்துகின்றன. அவற்றின் மூலம் ஈரானில் உள்ள ராணுவ நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
இந்த எண்ணெய் கிடங்கு மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஈரான் ஆட்சியின் ராணுவ உள்கட்டமைப்பிற்கு ஏற்படும் சேதத்தை ஆழப்படுத்துவதில் கூடுதல் படியாகும் என்று தெரிவித்தது.
இதற்கிடையே பிரதான சுத்திகரிப்பு வளாகத்திற்கு அருகே தெற்கு தெக்ரானில் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் சுத்தி கரிப்பு நிலையம் சேதமடையவில்லை என்று தெரிவித்து உள்ளது.
அதே போல் ஈரானின் கெஷ்ம் தீவில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கிடையே எண்ணெய் கிடங்குகள், குடிநீர் ஆலை மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அரக்சி கூறும்போது, கடல் நீரை குடி நீராக்கும் ஆலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதன் மூலம் ஒரு அப்பட்டமான, அவநம்பிக் கையான குற்றத்தை செய்து உள்ளது. இந்த தாக்குதலால் 30 கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஈரானின் உள்கட்டமைப்புகளை தாக்குவது என்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த முன் உதாரணத்தை அமெரிக்கா தான் செய்துள்ளது. நாங்கள் அல்ல" என்றார்.
ஈரானின் இஸ்பஹானில் உள்ள விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கிருந்த போர் விமானங்களை அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்து உள்ளது.
இதற்கிடையே ஈரான் முழுவதும் ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தின.
போர் காரணமாக ஈரானில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து உள்ளனர். அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதலை ஈரான் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் விமான நிலையத்தில் பயங்கர தீப்பிழம்புகள் ஏற்பட்டு கொழுந்து விட்டு எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதே போல் குவைத் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்தபோது அதன் பாகங்கள் அங்குள்ள குடியிருப்பு கட்டிடம் மீது விழுந்தது. இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.
இதற்கிடையே தற்போது நடந்து வரும் தாக்குதலில் குவைத்தின் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பக்ரைனின் சல்மான் துறைமுகத்திற்கு அருகில் உள்ள தளத்தை ஈரான் தாக்கியதாக பக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பக்ரைனில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
துபாய் மீது ஏவப்பட்ட டிரோன்கள் இடைமறிக்கப்பட்டன. அப்போது நடுவானில் அழிக்கப்பட்ட டிரோன்களின் பாகங்கள், துபாயின் 90 மாடிகள் கொண்ட பிரமாண்டமான மெரினா டவர் கட்டிடம் மீது விழுந்தது. இதில் அந்த கட்டிடத்தின் உச்சி பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். துபாயின் அல் பர்ஷாவில் வான்வழி இடைமறிப்பின் இடிபாடுகள் ஒரு வாகனத்தின் மீது விழுந்ததில் பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே கத்தார், சவுதி அரேபியா மீது ஈரான் ஏவுகணைகள், டிரோன்களை வீசியது. அவைகள் இடைமறிக்கப்பட்டதாக அந்நாடுகள் தெரிவித்தன.
அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஜெருசலேம் ஹைபா உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் கடும் ஏவு கணை தாக்குதலை தொடுத்தது. இதனால் இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன. உடனே பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் மத்திய பெய்ரூட்டில் உள்ள ரமாடா ஓட்டல் கட்டிடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
மோதல் காரணமாக தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் இந்த ஓட்டலில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இஸ்ரேலின் சபெட் அருகே உள்ள இஸ்ரேலின் வடக்கு கட்டளை தலைமையகமான டாடோ தளத்தின் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஈரான் மீது இன்று கடுமையான தாக்குதல் தொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதனால் ஈரானின் பல்வேறு இலக்கு களை குறி வைத்து வான்வழி தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்பதால் போர் உச்சத்தை அடைந்து இருக்கிறது.