இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி உறுதி
- 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது
- விமான சேவை எல்லைப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் நேற்று சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான விமான சேவை கொரோனா பெருந்தொற்று, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இரு நாடுகளும் பத்திரிகையாளர்களை பரஸ்பரம் தங்களது நாடுகளில் தங்கி செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.