உலகம்

கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்து: பலி எண்ணிக்கை 218 ஆக உயர்வு

Published On 2025-04-11 05:57 IST   |   Update On 2025-04-11 05:57:00 IST
  • கேளிக்கை விடுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
  • கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.

சாண்டோ டொமிங்கோ:

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது.

இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள்.

அந்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது திடீரென கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.

சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்தது.

இந்நிலையில், படுகாயம் அடைந்த 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலர் இறந்ததால் தற்போது பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இறந்தவர்களில் பலர் சுற்றுலா பயணிகள் என்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே உடைமைகளை வைத்து அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

Tags:    

Similar News