உலகம்

சீன உளவு கப்பலின் வருகையால் இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பா?: ஜெய்சங்கர் பேட்டி

Published On 2022-08-18 02:30 GMT   |   Update On 2022-08-18 02:30 GMT
  • 22-ந் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும்.
  • சீன கப்பல் அமைதி, நட்புறவு பயணமாக இலங்கைக்கு வந்துள்ளது.

பாங்காக் :

சீன உளவு கப்பல் 'யுவான் வாங்-5' இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பலில், 750 கி.மீ. தூரம் வரை உள்ள இடங்களை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

எனவே, கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் மற்றும் தென் இந்தியாவில் உள்ள இந்திய ராணுவ நிலையங்களை சீன உளவு கப்பல் கண்காணித்து பாதுகாப்பு ரகசியங்களை சேகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதுதொடர்பான கவலைகளை இந்தியா தெரிவித்ததால், கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது. அதனால், கடந்த 11-ந் தேதி வரவேண்டிய கப்பல், தாமதமாக 16-ந் தேதி வந்து சேர்ந்தது.

இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள், கப்பலின் தானியங்கி அடையாள சாதனத்தை இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டும், இலங்கை கடல் பகுதியில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைகளை இலங்கை அரசு விதித்து இருப்பதாக தெரிகிறது.

22-ந் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும்.

இந்தநிலையில், இந்தியா-தாய்லாந்து கூட்டு ஆணைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம், சீன உளவு கப்பல் வருகை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

அண்டை நாட்டில் நடக்கும் விஷயங்கள், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், அதில் கவனம் செலுத்துவோம்.

இந்தியாவின் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த நிகழ்வையும் மிக மிக உன்னிப்பாக கண்காணிப்போம். இதை ஏற்கனவே எங்கள் செய்தித்தொடர்பாளர் சொல்லி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, சீன உளவு கப்பலின் கேப்டன் ஜாங் ஹாங்வாங் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

சீன கப்பல் அமைதி, நட்புறவு பயணமாக இலங்கைக்கு வந்துள்ளது. எரிபொருள் நிரப்புவதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும். பன்னாட்டு கப்பல்கள் வந்து செல்லும் சர்வதேச துறைமுகம் என்ற முறையில், சர்வதேச நடைமுறைப்படி, தேவையான உதவிகளை இந்த துறைமுகம் அளிக்கும் என்று நம்புகிறோம்.

சீன கப்பலின் வருகையால், விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சீனா-இலங்கை இடையிலான தொடர்பு வலுப்படும். இரு நாடுகளின் மக்கள் இடையிலான நட்புறவு மேலும் வளரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான்சன் லியு கூறியதாவது:-

இலங்கை அரசும், இலங்கை துறைமுக ஆணையமும் அனுமதிக்கும் பன்னாட்டு கப்பல்களை இந்த துறைமுகம் வரவேற்று வருகிறது. கடந்த மாதம் வரை, நூற்றுக்கணக்கான எண்ணெய், எரிவாயு கப்பல்கள், சுற்றுலா கப்பல்கள். படகுகள் ஆகியவை வந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News