உலகம்

அமெரிக்க ராணுவ வரலாற்றில் மைல்கல்: கப்பற்படை தலைமை பதவிக்கு பெண் அதிகாரியை நியமித்தார் ஜோ பைடன்

Published On 2023-07-22 11:41 IST   |   Update On 2023-07-22 11:41:00 IST
  • 1985-ம் வருடம் கப்பற்படையில் தனது முதல் பொறுப்பை ஏற்றார்
  • கடந்த செப்டம்பர் மாதம் கப்பற்படையின் துணைத்தலைவராக பொறுப்பேற்றார்

அமெரிக்காவின் கப்பற்படையில் மிக உயர்ந்ததாகவும், பெருமைக்குரியதாகவும் கருதப்படுவது, அமெரிக்க கப்பற்படை செயலரின் கீழ் வரும் அமெரிக்க கப்பற்படை நடவடிக்கைகளின் தலைவர் (Chief of Naval Operations) பதவி.

இப்பதவிக்கு இதுவரை அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத ஒரு நிகழ்வாக அதிபர் ஜோ பைடன், லிஸா ஃப்ரான்செட்டி எனும் ஒரு பெண்மணியை நியமித்திருக்கிறார். இதன்மூலம் லிஸா அமெரிக்க படைகளின் கூட்டு தலைவர்களில் (Joint Chiefs of Staffs) இடம் பெறும் முதல் பெண்மணியும் ஆகிறார்.

தற்போது அமெரிக்க கடற்படையின் துணைதலைவராக பணியாற்றும் லிஸா, தனது பணிக்காலத்தில் இதுவரை பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கிறார்.

1985-ம் வருடம் கப்பற்படையில் தனது முதல் பொறுப்பை ஏற்ற லிஸா, பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

கொரியாவிற்கான அமெரிக்காவின் கடற்படையின் ஆணையர், கடற்படை போர்முறை மேம்பாட்டு நடவடிக்கைகளின் துணைதலைவர் மற்றும் ராணுவ கூட்டுபடையின் மூலோபாயம், திட்டம் மற்றும் நோக்கங்களின் இயக்குனர் என முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் கப்பற்படையின் துணைத்தலைவராக பொறுப்பேற்ற லிஸா, 2 தாக்குதல் நடவடிக்கைகளுக்கு துணை கடற்படை ஆணையராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது நியமனம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பதாவது:-

தற்போதைய கப்பற்படையின் துணைத்தலைவர் பொறுப்பு உட்பட மிகச்சிறப்பான 38-வருட பணி அனுபவம் கொண்டவரான லிஸா மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். நாட்டிற்காக அவரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. கொள்கை முடிவுகளில் மட்டுமல்லாமல் செயலாக்கங்களிலும் அவர் தனது திறனை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது சாதனைகளுக்காக, பெருமை வாய்ந்த 4 நட்சத்திர குறியீட்டை பெற்றவர். அமெரிக்க ராணுவ வரலாற்றில் இந்த பெருமையை பெறும் இரண்டாம் பெண்மணி இவர். அவர் இப்பொழுது இந்த தலைமை பதவியிலும் தனது பெயரை பதிவு செய்யும் விதமாக திறமையாக செயல்படுவார் என நான் நம்புகிறேன். இவரது நியமனம் அமெரிக்க ராணுவத்தில் பாலின பிரதிநிதித்துவத்துக்கான ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இவ்வாறு பைடன் தெரிவித்தார்.

நேற்று பைடன் அமெரிக்க ராணுவத்தில் பல முக்கிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை நியமித்துள்ளார். ஜோ பைடனின் நியமனங்களை அமெரிக்க ராணுவ செயலர் லாயிட் ஆஸ்டின் பாராட்டியிருக்கிறார்.

Tags:    

Similar News