உலகம்

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவுக்கு ரஷியாவில் உற்சாக வரவேற்பு

Published On 2025-05-23 08:07 IST   |   Update On 2025-05-23 08:07:00 IST
  • அபுதாபி சென்றடைந்த இந்திய எம்.பி.க்கள் குழு, அங்கு ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை சந்தித்து பேசினர்.
  • ஜப்பான் சென்றடைந்த சஞ்சய் ஜா தலைமையிலான குழுவினர், ஜப்பான் வெளியுறவு மந்திரி தகேஷி இவாயாவைச் சந்தித்தது பேசினர்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த சண்டை ஆகியவை குறித்து விளக்குவதற்காக உலகில் உள்ள 33 நாடுகளுக்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழுவினர் ஜப்பான் புறப்பட்டு சென்றனர். சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழுவினர் ஐக்கிய அமீரகத்துக்கு சென்றனர்.

அபுதாபி சென்றடைந்த இந்திய எம்.பி.க்கள் குழு, அங்கு ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை சந்தித்து பேசினர். அப்போது பயங்கரவாதத்தையும், அதன் மற்ற வடிவங்களையும் எதிர்த்துப் போராடும் இந்தியாவின் உறுதிப்பாட்டை விளக்கி கூறினர். மேலும் இந்தியா-அமீரகம் இடையேயான நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை குறித்தும் பேசியதாக அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அந்த நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள், உள்துறை மற்றும் வெளியுறவுக் குழுவின் தலைவர் டாக்டர் அலி அல்னுவைமியையும், கூட்டாட்சி தேசிய கவுன்சில் உறுப்பினர் அகமது மிர் கூரியையும் சந்தித்து பேசினர்.

இது தொடர்பாக ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. தனது எக்ஸ் பதிவில், 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியாவின் தீர்க்கமான வெற்றியை நாங்கள் பெருமையுடன் பகிர்ந்து கொண்டோம், மேலும் பாகிஸ்தானிலிருந்து வெளிப்படும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எடுத்துரைத்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபால் ஜப்பான் சென்றடைந்த சஞ்சய் ஜா தலைமையிலான குழுவினர், ஜப்பான் வெளியுறவு மந்திரி தகேஷி இவாயாவைச் சந்தித்தது பேசினர். அப்போது பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கினர். அப்போது ஜப்பான் மந்திரி தகேஷி, இந்தியாவின் நிதானத்துக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

ஜப்பானின் முன்னாள் பிரதமரும் ஜப்பான்-இந்திய சங்கத்தின் தலைவருமான யோஷிஹைட் சுகா, டோக்கியோவில் உள்ள முன்னணி ஜப்பானிய சிந்தனையாளர்கள், ஜப்பானின் தேசிய பாதுகாப்புக்கான பிரதிநிதிகள் சபைக் குழுவின் தலைவரான தகாஷி எண்டோ ஆகியோரை இந்திய குழு சந்தித்து பேசியது.

இதேபோல் தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் நேற்று டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றனர். ரஷியா சென்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷிய மந்திரிகள், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். இந்த சந்திப்பின்போது ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத ஆதரவு உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறுவார்கள்.

நாளை ஸ்லோவேனியாவுக்குச் செல்வதற்கு முன்பு, இந்த குழுவினர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News