9 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தில் விரிசல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல், ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு
- டிரம்ப் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
- 20 பிணைக்கைதிகள் உயிரோடு விடுவிக்கப்பட்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (9 நாட்களுக்கு முன்) போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் நிறுத்தத்தை உலக நாடுகள் வரவேற்றன.
ஹமாஸ் அமைப்பினர் உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளையும் விடுவித்தனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல், சிறையில் இருந்து பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.
நேற்று உயிரிழந்த இரண்டு பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு குற்றம்சாட்டி, "காசா முனையில் பயங்கரவாத இலக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாதுகாப்பு படைகளை கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் 9 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
எனினும் தாங்கள் போர் நிறுத்தத்தை கடைபிடித்து வருவதாககும், சொந்த தாக்குதலை மீண்டும் தொடங்க இஸ்ரேல் சாக்குபோக்கில் ஈடுபடுவதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை, ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி ரஃபா பகுதியில் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்க செயல்படும் இஸ்ரேல் படைகள் மீது பயங்கரவாதிகள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர் என இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில்தான் நேதன்யாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.