உலகம்

டிரோன் தாக்குதலில் 3 வீரர்கள் பலி - தக்க பதிலடி கொடுக்கப்படும் என பைடன் எச்சரிக்கை

Published On 2024-01-29 07:08 GMT   |   Update On 2024-01-29 08:26 GMT
  • ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.
  • தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது.

வாஷிங்டன்:

பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இதனால் ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.

இந்த நிலையில் ஜோர்டானில் நடந்த டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிரியா எல்லைக்கு அருகில் வட கிழக்கு ஜோர்டானில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு இந்த படைகளை குறி வைத்து அதிரடி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் உயிர் இழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு முதன் முறையாக அமெரிக்க படைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜோர்டானில் அமெரிக்க தளங்களின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வீரர்களை இழந்து இருக்கிறோம். இந்த தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது. இது சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கும் தீவிர ஈரான் ஆதரவு போராளி குழுக்களால் நடத்தப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இதற்குதக்க பதிலடி கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News