செய்திகள்

இந்திய ஹஜ் பயணிகள் எண்ணிக்கை 25 ஆயிரம் அதிகரிப்பு - சவுதி இளவரசர் ஒப்புதல்

Published On 2019-02-20 16:24 GMT   |   Update On 2019-02-20 16:24 GMT
சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு 'ஹஜ்' புனித யாத்திரை செய்ய செல்லும் இந்தியர்களுக்கான எண்ணிக்கையை 2 லட்சமாக அதிகரித்து சவுதி இளவரசர் இன்று ஒப்புதல் அளித்தார். #SaudiArabia #IndiaHajquota
புதுடெல்லி:

10 லட்சம்  மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது. ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். இதன் அடிப்படையில், கடந்த 2012 ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செய்தனர்.

பின்னர், வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதமும் குறைக்கப்படுவதாக கடந்த 2013 ஆண்டில் சவுதி அரசு அறிவித்தது.

இதன் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செய்ய அனுமதியளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை கூடுதலாக 35 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு, கடந்த (2018) ஆண்டு மேலும் 5 ஆயிரம் பேர் ஹஜ் செய்ய சவுதி அரசு அனுமதி அளித்தது.

இதனால், கடந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் சென்று வந்தனர்.

இந்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பல மாநில அரசுகளின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக அரசும் இந்த கோரிக்கையை முன்வைத்து பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது இவ்விவகாரம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் ஏற்றார்.

இந்த ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மேலும் 25 ஆயிரம் பேர் ஹஜ் செய்ய இளவரசர் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, இங்கிருந்து 2 லட்சம் முஸ்லிம்கள் இனி ஹஜ் யாத்திரை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #SaudiArabia #IndiaHajquota 
Tags:    

Similar News