செய்திகள்
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 5 குரங்குகள்.

மரபணு திருத்தப்பட்ட குரங்குகள் மூலம் மறதி நோயை தடுக்க சீன விஞ்ஞானிகள் புதுவித ஆய்வு

Published On 2019-01-25 10:55 GMT   |   Update On 2019-01-25 10:55 GMT
மரபணு திருத்தப்பட்ட 5 குரங்குகளை குளோனிங் முறையில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை, மறதி நோய் உள்ளிட்ட நோய்களை தடுக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.
பெய்ஜிங்:

‘அல்‌ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட பல நோய்கள் மரபணு வழியாக சந்ததிகளுக்கு பரவுகின்றன. எனவே இந்த நோயை தடுக்க விஞ்ஞானிகள் புதுவித முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தாயின் வயிற்றில் வளர்ந்த இரட்டைக்குழந்தைகளின் நோயை மரபணுவிலேயே நீக்கி சீன விஞ்ஞானி சாதனை படைத்தார். அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அனுமதி பெறாமல் இந்த பரிசோதனை மேற்கொண்டதாக விஞ்ஞான உலகம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் மரபணு கோளாறு நீக்கப்பட்ட 5 குரங்குகளை ‘குளோனிங்’ முறையில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை, மன அழுத்தம் மற்றும் ‘அல்‌ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட நோய்களை தடுக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

முதன் முறையாக குளோனிங் முறையில் மரபணு கோளாறு நீக்கப்பட்ட குரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்த 2 ஆய்வு கட்டுரைகள் அறிவியல் இதழில் வெளியாகி உள்ளன.

‘குளோனிங்’ குரங்குகள் ஷாங்காயில் உள்ள சீன அறிவியல் அகாடமியில் நரம்பியல் அறிவியல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News